Wednesday, October 15, 2014

தேங்காய்க்குள்ள பாம் !


ஆதலினால் என ஆரம்பித்து கருத்து கந்தசாமியாய் எந்த கருத்தையும் முன்வைக்காமல் வாழ்க்கையில் நடந்த  சம்பவங்களை வெறும் சாட்சியாய், பகடி  பார்வை பார்க்க முயன்றதின் விளைவே இந்த பதிவு !  மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும், பெயர்கள் மாற்றப்பட்டிருந்தாலும் ( அடியேன் உட்பட ! )  இந்த  பதிவில் சம்பவங்கள் மற்றும் மனிதர்கள் உண்மையே !

கோவிலுக்கு  தேங்காய் வாங்க போகும் கவுண்டமனி தேங்காய் விலை அதிகமாக இருப்பதை அறிந்து கடுப்பாகி தேங்காய்க்குள் பாம் இருப்பதாக புரளியை கிளப்பிவிட்டுவிடுவார் ! அதை  தொடர்ந்து நடக்கும் களேபரங்களும், உசிலை மணியின் புலம்பலும் கொண்ட தமிழ் சினிமாவின்  " தேங்காய்க்குள்ள பாம்  " காமெடி காட்சியை ( படத்தின் பெயர் உதயகீதம்  ) அறியாதவர்கள் இருக்க முடியாது !

மேலோட்டமாக யோசித்தால் உண்மையில் இப்படியும் நடக்குமா என தோன்றும். ஆனால் விமான நிலையம் போன்ற பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் கொண்ட, " அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் " எனத்தோன்றும் இடங்களில் நடக்கும் சில சம்பவங்களை நிதானமாக யோசித்துப் பார்த்தால் தேங்காய் பாம் காமெடி நிஜ வாழ்க்கையிலும் சாத்தியமே என தோன்றுகிறது !



பிரான்ஸ் வந்து ஒரு வருடம் கழித்து முதல் முறையாக ஊர் திரும்புகிறேன்... வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்புபவர்கள் கோட் சூட்டில் தான் வந்திறங்க வேண்டும் என்ற எங்கள் ஊரின் எழுதாத விதியின் பொருட்டு நண்பன் ஒருவனுடன் பாரீஸ் மாநகரெங்கும் கோட் சூட்டுக்காக அலைந்தேன் ! ஆரம்பகால வடிவேலு போன்ற அன்றைய எனது உடல்வாகுக்கு ஐரோப்பிய அளவு கோட்டுகள் பொருந்தவில்லை ! ஒருவழியாக எதோ ஒரு கடையில் என் அளவு கிடைத்தது !

என் அளவு என்பதைவிட,

" இந்த கோட்டில் நீங்கள் அச்சுஅசல் ழாக் சிராக் போல இருக்குறீர்கள் முசியே ! "

என கடைக்காரி டன்கணக்கில் ஐஸ் வைத்து என் தலையில், சாரி உடம்பில் கட்டிவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும் ! ( ழாக் சிராக் - அன்றைய பிரான்ஸின் ஜனாதிபதி ! உண்மையில் அந்த கோட் பெரியது !!  ழாக் சிராக்கின் படத்தையும் வடிவேலுவின் படத்தையும் பதிந்துள்ளேன்... அன்று அவள் சொன்னதில் நானும் உச்சி குளிர்ந்தேனே... என்னத்த சொல்ல ?! )


அம்மாவுக்கு, அப்பாவுக்கு, தம்பிக்கு, பாட்டிக்கு, சித்திகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு , நண்பர்களுக்கு என பட்டியலிட்டு பரிசு பொருட்கள் வாங்கியதில் பெட்டியின் கணம் அதிகமாகிவிட்டது. அனுமதிக்கப்பட்ட நாற்பது கிலோவை தாண்டி இன்னும் அதிகமாக இருபது கிலோ !

பெட்டியை  எடை பார்க்கும்  இடத்திலேயே பிரச்சனை ஆரம்பம்...

இருபது கிலோவை கழித்தே ஆக வேண்டிய கட்டாயம்.... அப்படி செய்தால் ஒரு சித்திக்கு கொடுத்த பொருள் இன்னொரு சித்திக்கு இல்லாமல் பூகம்பம் வெடிக்கும் அபாயம் ( கூட்டுக்குடும்பம் சாமிகளா ! )

பரவாயில்லை... அவங்க முன்னாடி எடுத்துடு... அப்புறமா கைப்பையில வச்சிக்கலாம் ! "

பயண அனுபவமிக்க நண்பர்களின் யோசனை !

பயண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது... கைப்பையிலோ ஏற்கனவே கணம் அதிகம்  ! இதில் எங்கே இன்னொரு இருபது கிலோவை திணிப்பது ?! முடிந்தமட்டும் திணித்து... கோட் பாக்கெட்டுகளிலெல்லாம் பொருட்களை நிரப்பிக்கொண்டு படுடென்சனாய், வழியனுப்ப வந்திருந்த தாத்தாவின் முன்னால் சட்டென குணிந்து அவரின் கால்களை பட்டென தொட்டு வணங்கினேன் !
 
" கோட்டும் சூட்டுமா விரைப்பா தாத்தாவோட காலுக்கு சல்யூட் வச்சீங்களே தம்பி... "

கூட வந்திருந்த சித்தப்பாவின் நண்பர் இன்றுவரை சொல்லிக்காட்டி கடுப்பேற்றிக்கொண்டிருக்கிறார் !

அடுத்ததாய் கைப்பயை சோதனையிடும் படலம்...

" கைத்துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா ?!.... "

ஸ்கேனரில் அமர்ந்திருந்த பெண் அதிகாரி சலனமற்ற முகத்துடன் கேட்க, எனக்கு தூக்கிவாரிப் போட்டது !

நொண்டிக்குதிரையாக இருந்தாலும் பரவாயில்லை... கொஞ்சம் கற்பனை குதிரையில் ஏறுங்கள் !

பங்க் கிராப்பும் வழியும் மீசையுமாய், கறுப்பாய்... ஒல்லியாய்... அவன் உருவத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத நான்கு பட்டன் பிளேசர் கோட் அணிந்த இளைஞன்... மேல் கீழ் பாக்கெட்டுகளிலெல்லாம் ஏதேதோ பொருட்களுடன் பிதுங்கிய கோட் ஏற்ற இறக்கமாக தொங்கிக்கொண்டிருக்கிறது ... கைப்பையில் துப்பாக்கி ! ...

" இ... இல்லையே ! "

" இருக்கிறதே !"

மானிட்டரை பார்த்தப்படி அவள் அழுத்திக் கூற, என் கை கால்கள் தந்தியடிக்க தொடங்கின !

" இ... இருக்க முடியாது... "

" உங்கள் கைப்பையில் ,இருக்கிறது முசியே... இதோ இங்கே ! "

வரும் ஆனால் வராது என்பது போல ஓடிக்கொண்டிருந்த உரையாடலை முடிக்க விரும்புபவள் போல கடுமையாய் கூறி, என் பையின் ஒரு பகுதியை அழுத்தி காட்டினாள் !

என் கண்கள் இருண்டு காதுகள் அடைக்க,

" படிச்சி பெரியாளா வருவான்னு பிரான்ஸ் அனுப்புனா...  பாவி... ஆயுதம் கடத்தி மாட்டிக்கிட்டானே... "

என் குடும்பத்தினரின் தமிழ் சினிமா புலம்பல் அசரீரியாய் காதுகளில் ஒலிக்க...

" இனி அவன் நம்ம வீட்டு வாசலை மிதிக்ககூடாது ஆமா ! "

சொம்பு தண்ணீரை குடித்துவிட்டு, துண்டை உதறியபடி குடும்ப " நாட்டாமை " தாத்தா தீர்ப்பு வாசிக்கும் காட்சி மனதை உலுக்க...

 காலம்,  சத்தியம் பண்ண குழந்தையை தாண்டும் பாக்யராஜ் பட கதாநாயகியின் கால்களைப்போல ஸ்லோ மோஸனில் வழுக்க, பையைத் திறந்தேன்...

" இதோ ! "

எனக்கு முன்னரே என் பையில் கைவிட்ட அதிகாரி அதை எடுத்து என் முகத்துக்கு நேராக  நீட்ட ...

அதுவரையிலும் ஓடிய பேதாஸ் சீன் மாறி பாரதிராஜா பட வெள்ளுடை தேவதைகள் என்னை சுற்றி லலலா பாட தொடங்கினார்கள் ! ( பிரான்ஸ்  ஏர்ப்போர்ட்டிலும் என் கற்பனையில் கிராமிய பெண்கள் தான் ! )



அனைவருக்கும் பரிசுப்பொருட்கள் வாங்கிய நான், முபாரக் பதிவில் குறிப்பிட்டிருந்த ராஜா ரெக்கார்டிங் செண்ட்டரின் மகா கெட்ட நண்பர்களுக்காக விதவிதமாய் சிகரெட் லைட்டர்கள் வாங்கியிருந்தேன்... அவற்றில் ஒன்று அச்சு அசலாய் துப்பாக்கியைப்போல !


நூறு அடிக்கு முன்னால் போலீஸைக் கண்டாலே காரணமில்லாமல் கால்கள் நடுங்கும் " ரொம்ம்ம்ப பயந்த " பையன் நான்  ! அப்படிப்பட்ட என்னிடம் துப்பாக்கி வைத்திருக்கிறாயா எனக்கேட்டதும் அனைத்தும் மறந்து தொலைந்ததினால் வந்த வினை !

" பாருங்கள் ! சொன்னேனில்லையா ?.... "

" முசியே என்ன செய்கிறீர்கள் ? இங்கு நெருப்புகொழுத்தக்கூடாது என்று தெரியாதா ?! சரி சரி ! நீங்கள் கொண்டு செல்லலாம்... "

அதீதமான ஆர்வக்கோளாறில் அந்த லைட்டரை பெண் அதிகாரியின் முகத்துக்கு நேராக கொளுத்திக்காட்ட, அடுத்த அலம்பல் !

பதற்றமாய் விலகி கூறியவளிடம் பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு,

" நீயே வைத்துக்கொள் "

என்றேன் !

" நோ ! நோ ! எனக்கு தேவையில்லை "

( கொடுக்காமலேயே எடுத்துக்கொள்பவர்கள் நம்மூர் அதிகாரிகள்தான் ! ) அவள் பதற, தலையை சுற்றாமல் பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன் ! ( உண்மையாக நண்பர்களே ! )

இன்று நினைத்தாலும் " உஸ்ஸ்... அப்பாடா.... " என வடிவேலுவைப்போலவே தலையை உலுக்கிக் கொள்வேன் ! இந்த சம்பவம் நடந்தது இருபது வருடங்களுக்கு முன்னால் ! அதுவே பாதுகாப்பு கெடுபிடிகள் தூள் பறக்கும் இன்று நடந்தால்....

" ஒரு நிமிடம் முசியே... ! "

மெல்லிய சிரிப்புடன் பெண் அதிகாரி இண்ட்டர்போனை உசுப்பியிருப்பாள்... அடுத்த ஓரிரு நிமிடங்களில் செண்ட்ரல் போலீஸும் ராணுவமும் இணைந்த பாதுகாப்புக் குழுவான  Vigipirate காவலர்கள் பாய்ந்து வந்து என்னை குப்புறத்தள்ளி விலங்கு பூட்டியிருப்பார்கள் !

பி.கு ! : சில நாட்களுக்கு முன்னர் பணி சார்ந்த பயிற்சி வகுப்பு ஒன்றுக்காக கோட் அணியும் தேவை ஏற்பட்டது...

" வாவ் ! உனது உடலமைப்புக்கு பொருந்தும்படியான மாடலில், கலரில் மிக அழகாக இருக்கிறது ! "

என்னுடன் பணிபுரியும் பெண் சிலாகித்தாள் ! ( கோட்டை மட்டும்  தான் !! )

அனுபவமும் காலமும் உடை தேர்வு பற்றிய என் ரசணையை எவ்வளவோ மேம்படுத்தியிருந்தாலும்... மேற்கூறிய சம்பவத்திலிருந்து இன்றுவரை விமான பயணத்துக்கு ஜீன்ஸ் டீ சர்ட்தான் !


.........................................................................................


மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு பிறகு... இந்தியாவிலிருந்து பிரான்ஸ் திரும்புகிறேன்... நள்ளிரவில் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கான  வரிசை  ... பாதுகாப்பு சோதனை பணியில் இருந்தது இந்திய எல்லைக்காவல் ராணுவத்தினர் ! ஆங்கிலமும் புரியாது ! ஹிந்தி... ஹிந்தி... ஹிந்தி மட்டுமே !

எனக்கு முன்னால் நின்றிருந்தவரும் என் ஊரை சேர்ந்தவர்தான் ! அவரிடம் பேசி பழகியது கிடையாது என்றாலும் பல முறை பார்த்த நபர். அவர் கொஞ்சம் " செல்லக்கிருக்கு "  என  பழகியவர்கள் கூற கேட்டிருக்கிறேன் !

" க்யா ?! "

அவரது கைப்பையிலிருந்து இரண்டு உரித்த தேங்காய்களை எடுத்து அவரது முகத்துக்கு நேராக  நீட்டி கேட்டார் ஒரு ஜவான் !

" உம்ம்ம்... தேங்கா ! "

" ... "

" கோக்கனெட்... நு..நுவா து கொக்கோ ! "

தனக்கு தெரிந்த தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என அனைத்து மொழிகளிலும் சொல்ல முயன்றார் அந்த மனிதர் !

"  நை  ! நை !... "

மணிரத்னம் பட கதாபாத்திரத்தையும் விட சிக்கனமாக பேசி, இறுகிய முகத்துடன் தலையாட்டி அனுமதி மறுத்த ஜவான் பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் தேங்காய்களை போடுமாறு சைகை காட்ட...

" மூதேவி !  தேங்காடா  !.... ம்ம்ம்.... இரு...இரு.... "

சுற்றும் முற்றும் பார்த்தபடி புலம்பியவர் சட்டென திரும்பி எங்களையெல்லாம் விலக்கிக்கொண்டு கொண்டு சற்று தள்ளியிருந்த ஒப்பனை அறை நோக்கி ஓடத்தொடங்கினார் !



வாக்கி டாக்கியை பாய்ந்து எடுத்த ஜவான் பாதுகாப்பு படையை விளிக்க, சூழ்நிலை பதற்றமடைய... எங்கள் அனைவரின் பார்வைகளும் ஆண்கள் ஒப்பனை அறையை நோக்கி...

சில நிமிடங்கள்...

இரண்டு தேங்காய்களையும் உடைத்து கைகளில் ஏந்தியபடி குணா பட கமலின் பரவச பார்வையுடன் வெளியே வந்தார் மனிதர் !


" இப்ப பாரு ! வெறும் தேங்காதாண்டான்னு சொன்னேன்ல ! "

" ஜாவ் ! ஜாவ் ! "

தலையில் அடித்துக்கொண்டார் எல்லைக்காவல்படை ஜவான் !

அனைத்து சோதனைகளும் முடிந்து விமான அழைப்பிற்காக காத்திருந்த என்னருகில் வந்து அமர்ந்தார் அந்த மனிதர் !

" தம்பிக்கும் நம்ம ஊருதானா ?... வீட்டு கொல்லையில காய்ச்சது ... ரெண்டு நாள் கறிக்கு உதவுமேன்னு கொண்டு வந்தா... குப்பையில் போடனுமாம்ல ?!...  ஊருல எல்லா பயலும் என்னை பைத்தியம்னு சொல்லிக்கிட்டு திரியறது தெரியும் தம்பி... ஆமா ! நாமெல்லாம் காரியக்கார பைத்தியம்... ! "

 எனது பதில்களையே எதிர்பார்க்காதவர் போல கையிலிருந்த தேங்காய்களை ஒருவித பிரியத்துடன் பார்த்தபடி பேசியவரை ஏறிட்டேன்...

ஒப்பனை அறையின் மேடை கல்லில் மோதிதான் உடைத்திருக்கவேண்டும்... அந்த பரபரப்பிலும் மிகச் சரியான பாதிகளாய், பிசிரின்றி உடைத்திருந்தார் மனிதர் !


" தேங்காய் பாம் " மற்றொரு பதிவிலும் வெடிக்கும் !




இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Saturday, October 4, 2014

தமிழர் என்றோர் இனமுண்டு...

 இது " தாய் மண்ணே வணக்கம் " பதிவின் தொடர்ச்சி . ..

மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறோமே, அந்த குவளையில் குடிக்க ஒன்றுமே இல்லையா ?! தமிழ் சமூகத்தில், தமிழனிடத்தில் பாராட்டத்தக்கது எதுவுமே கிடையாதா என்றெல்லாம் விமான பயணத்தின் போது தோன்றிய எண்ணங்களை பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

சென்னை சர்வதேச விமான நிலையம்...

என் தந்தைக்கு மூட்டுவலி பிரச்சனை. ஏற்கனவே டெல்லி விமான நிலையத்தில் அதிக தூரம் நடந்ததினால் வலி அதிகமாகி தொடர்ந்து நடக்கவோ, ஒரே இடத்தில் நிற்கவோ முடியவில்லை. விமானச்சீட்டு பதிவின் போதே குறிப்பிட்டு சக்கரநாற்காலிக்கு கேட்டிருக்கலாம். செய்யவில்லை !

குடியேற்ற சோதனை அதிகாரியை நெருங்கி பாஸ்போர்ட்டுகளை ( பிரயாண உரிமைச்சீட்டு ! சரியா ?! ) கொடுத்தேன்.

" ஏர் இந்தியால வந்தீங்களா சார் ?! ஹூம் ! அவங்கமட்டும்தான் இதை மறப்பாங்க ! "

அவர் எங்கள் அனைவருக்குமாக ஐந்து நீண்ட படிவங்களை கொடுத்து நிரப்ப சொல்லிவிட்டார்  ! பொதுவாக அந்த படிவங்களை விமானத்திலேயே கொடுத்துவிடுவார்கள். அனைத்துவிபரங்களையும் முன்கூட்டியே நிரப்பி தயாராக கொண்டுவரலாம் !

 எனது விமான பயண வரலாற்றிலேயே முதல்முறையாக தாமதமின்றி சரியான நேரத்துக்கு வந்திறங்கிய தாய் மண்ணின் முதன்மை விமான நிறுவனத்தை ( இங்கு முதன்மை என்பது லாபத்தை குறிக்கும் சொல் அல்ல ! ) சிலாகித்துகொண்டிருந்ததால் அவர்கள் படிவங்களை கொடுக்க மறந்தது பெரிதாக படவில்லை !


நான் படிவங்களை நிரப்ப தொடங்க,

" அப்பா, அம்மா பிள்ளைகளை அங்க போய் உக்கார சொல்லுங்க சார் ! நீங்க மட்டும் இருந்தா போதும் ! "

நிற்க முடியாமல் தடுமாறும் என் தந்தையை பார்த்துவிட்டு அதிகாரி காட்டிய இடம் குடியுறிமை சோதனை மையத்துக்கு வெளியே தூரத்தில் இருந்தது. சட்டப்படி விசாவை சரிபார்க்காமல் அங்கிருந்து நகரக்கூடாது.

" பரவாயில்லை சார் ! வயசானவங்க... குழந்தைங்க.... "

எனது தயக்கத்தை படித்தவராய் பேசிய அதிகாரியின் குரல் மிக பரிச்சயமானது போல் தெரிய யோசித்தேன்... காரைக்காலில் எங்கள் குடும்ப மருத்துவரின் குரலை   ஒத்திருந்தது அவரின் குரல். அதைவிட ஆச்சரியம் இருவருக்கும் ஒரே பெயர் !

இதையெல்லாம் அவரிடம் குறிப்பிட்டபோது ஒரு நண்பரை போன்ற  சிரிப்புடன் கேட்டுக்கொண்டே தன் கடமையை செய்துமுடித்தார் !

பொதுவாக அனைத்து நாடுகளின், ஏன் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் கூட குடியுறிமை அதிகாரிகள் இறுகிய முகத்துடனேயே இருப்பார்கள். அதிகமாய் ஒரு வார்த்தை பேசினால் முறைப்பே பதிலாக கிடைக்கும் ! சலனமற்ற பார்வையுடன் இயந்திரம் போல சோதனைகளை முடித்து அனுப்புவார்கள் !

கிளம்புபோது அவரை திரும்பி பார்த்தேன். என்னுடன் வந்திருந்த பிரெஞ்சு மற்றும் ஆங்கில பயணிகளிடமும் அதே கனிவுடன் பேசிக்கொண்டிருந்தார் !

எனது பள்ளி பருவத்தின் என் சி சி கேம்பின் போது ஹிந்தி தெரியும் என்று பேச்சுவாக்கில் சொன்ன ஒரு நண்பனுக்கு தனக்கு வந்த சப்பாத்திகளில் ஒன்றை அனுப்பிய ஹவில்தாரும், ( பல தலைமுறைகளாக தமிழ்நாட்டிலேயே வசிக்கும் அந்த நண்பன் காய்ந்த சப்பாத்தியை விக்கலுடன் விழுங்கியபடி எங்கள் தட்டிலிருந்த் சோற்றை ஏக்கமாய் பார்த்தது வேறு விசயம் ! ) சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜட்டியுடன் நிற்க வைத்த மும்பை போலீஸ் அதிகாரி தான் ஹிந்தியில் பேசியதும் உடைகளை திருப்பி கொடுத்தை சொல்லும் என் நண்பன் ஒருவனின் அப்பாவின் அனுபவமும் சட்டென ஞாபகம் வந்தது !

சென்னை திநகர் பகுதியின் பரபரப்பான சரவணபவன்...

ஒவ்வொரு மேசையின் முன்னாலும் இடம்பிடிக்க வரிசை...

" தோ ! சீக்கிரமா முடிச்சிடறேன் தம்பி ! "

அவருக்கு பின்னால் நின்ற என்னை கண்டதும் இலையிலிருப்பதை அவசரமாய் விழுங்கியபடி பேசிய பெரியவரை பார்த்து அதிசயித்தேன் !

" ஒண்ணும் அவசரமில்லைங்க ! நீங்க பொறுமையா சாப்பிடுங்க ! "

" இல்ல தம்பி நான் முடிச்சிட்டேன் ! நீங்க பசியோட நிக்கறீங்கள்ல... ! "

மனிதர் அவசரமாய் எழுந்துவிட்டார் ! இத்தனை பாடுகளும் ஒரு ஞான் வயிற்றுக்குத்தான் ! அவர் ஒன்றும் இலவசமாய் சாப்பிடவில்லை ! கொடுத்த காசுக்கு பொறுமையாய், அமைதியாய், அவர் விரும்பும் நேரம்வரை உண்டு முடிக்கும் முழு உரிமையும் அவருக்குண்டு !



ன்னதான் ஆயிரம் வேலைகளுடன் ஓடிக்கொண்டிருந்தாலும் கண்ணெதிரே ஒரு விபத்தினை கண்டுவிட்டால் சட்டென ஓடித்தூக்கும் குணம்... மழையோ, புயலோ, அரசு இயந்திரம் விழிக்கும் முன்பே ஜாதிமத பேதமின்றி வரிந்துக்கட்டிகொண்டு நிவாரணத்திலிறங்கும் சராசரி மனிதர்கள்... வடகோடியின் வெள்ள நிவாரணத்துக்குக்கூட தன்னால் இயன்றதை அள்ளிக்கொடுக்கும் நெஞ்சம்...

" யாரு பெத்த பிள்ளையோ... "

தீக்குளித்த, ஆசிட் வீசிய சம்பவங்கள் காதில் விழும்போதெல்லாம் அந்த முகம் அறியாத உயிர்களை தங்கள் பிள்ளைகளாய் எண்ணி விம்மும் மனங்கள் ...

" இனி அவன் பொண்டாட்டி புள்ளையோட கதி... "

கொடூர குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை  பெற்ற கைதியின் குடும்பத்தை நினைக்கும் குணம்...

" என்ன இருந்தாலும் அவரை இந்த நிலமையில பார்க்க முடியலப்பா ! "

தனக்கு பிடிக்காத கட்சியின் தலைவராக இருந்தால் கூட அவரின் வீழ்ச்சியை தாங்காமல் தவிப்பவர்கள் !

இதுதான், இந்த மனிதநேயம் தான், இரக்ககுணம் தான் தமிழனின் தலையாய குணம் என தோன்றுகிறது !

" போகட்டும் விடு ! இதுக்குமேல என்ன செய்ய சொல்ற ?! "

தன் வீட்டின் தலைவாசல் தாண்டி நுழைந்து தலைகுணிந்தவனின் குற்றம் மறந்து மன்னிக்கும் மனிதநேயம் ! ( தமிழனின் இந்த மனித நேயத்தை மறதியாய் நினைத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவன் வீட்டிலேறும் அரசியல்வாதிகளையும் அவன் மன்னிப்பது வேறுவிசயம் ! )

இந்தியாவெங்கும் பரவிவிட்ட மததுவேச அரசியல் தமிழ்நாட்டில்மட்டும் இன்னும் தடுமாறுவதன் காரணம் தமிழனின் மனிதநேயம்தான் ! 

" என்னாய்யா ? அங்கேருந்து இங்க வந்ததுக்கு இவ்ளோ ரூபாயா ?!... "

" சரி ! சரி ! உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ! ஒரு பத்து ரூபா குறைச்சிக்குங்க ! "

" இல்ல... அதிகம் ! "

" என்னா சார்... எல்லாத்துக்கும் செலவு பண்ணிட்டு எங்ககிட்ட மட்டும் இவ்ளோ கறாரா... எதோ உன் பேரை சொல்லி... "

அவன் இறங்க, இவன் கொடுக்க....

நயந்த வார்த்தைகளுக்கு முன் சட்டென இளகும் அன்பினன் தமிழன் !  காலங்காலமாய் பெரிதாய் போர்களை சந்திக்காத மண்வாசி ! அன்பையும் அறத்தையும் போதித்து, அவமானம் நேர்ந்தால் துடைத்தெரிவதைவிட உயிர்த்துறப்பதை மேலாக கருதிய மரபில் வந்தவன் !  " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற பண்பாட்டு பரம்பரை சேர்ந்தவன்  !  சக மாநிலத்தவனோ அல்லது அயல் நாட்டானோ எவராகினும் நேசக்கரம் நீட்டுபவன் !

என்னங்க நீங்க ? வெளிநாட்லயெல்லாம் வயசானவங்களுக்கு ஒரு வாசல், முடியாதவங்க  உக்கார தனி சீட்டு அது  இதுன்னு அவ்ளோ பண்ணிக்கிட்டிருக்கான்... "

உண்மைதான் ! ஆனால் மேலை நாடுகளிலெல்லாம் மனிதநேயம் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட விசயம் ! என்னால் நடக்க முடியாது, என்னால் நிற்க முடியாது என்றெல்லாம் சட்டப்படி நிருபித்தால் சட்டம் காட்டும் உதவிகள் கிடைக்கும் ! அங்கெல்லாம் சகமனிதன் என்ற எண்ணத்தைவிட சட்டத்தை மதிக்கவேண்டும் என்ற நிலையிலிருந்து செய்யும் உதவிகளே அதிகம் ! ஆழ்ந்து யோசித்தால் தடுக்கி விழுந்தவனை அனிச்சையாய் ஓடித்தூக்குவதற்கும் அப்படி தூக்க வேண்டியது கட்டாயம் என்று சட்டம் சொல்கிறது என தூக்கிவிடுவதற்குமான வித்யாசம் புரியும் !

மேலை நாடுகளில் உறவுகள் கூட சட்டங்களுக்கு உட்பட்டவைதாம் ! எழுபதை தாண்டிய பெற்றோருக்கு கட்டாயம் முதியோர் இல்லங்கள்தான் ! வாழ்க்கை முழுவதையுமே சட்டத்துக்கு உள்ளே, வெளியே என பிரித்து பழகிய நிலை அது !

ஆனால் மேலை நாடுகளின் நுகர்வோர் கலாச்சார அரசியலில் சிக்கிய தமிழனின் இந்த தலையாய மனிதநேயம் மிக வேகமாக மறைந்துகொண்டு வருவதையும் இங்கே குறிப்பிட வேண்டும் !  மததுவேச அரசியல் சூழ்ச்சிக்கு நாமும் பலியாகிவிடுவோமோ என பயமாக உள்ளது !



மீன்டும் சென்னை விமான நிலையம் !

" ரூல்ஸ்படி நீங்க முன்னாடியே பதிஞ்சிருக்கனும் சார்... பரவாயில்லை ! முடியாமதானே கேக்கறீங்க ! "

வரும்போது தந்தையால் நடக்க முடியாமல் போனதை கூறி சக்கரநாற்காலி கேட்கவும் உடனடியாக ஏற்பாடு செய்தார் ஒரு அதிகாரி.

டெல்லியில் விமானத்திலிருந்து இறங்கியபோது ஒரு சிப்பந்தி சக்கரநாற்காலியுடன் காத்திருந்தார். சென்னை அதிகாரி டெல்லிக்குமாக சேர்த்து பதிந்திருந்தது அப்போதுதான் புரிந்தது !

ரும்போது ஏர் இந்தியா விமானம் காலதாமதமின்றி இறங்கியதை ஆச்சரியமாய் குறிப்பிட்டிருந்தேன்... அதைவிட ஆச்சரியமாய், அரைமணி நேரம் முன்னதாகவே பாரீஸ் விமானநிலையம் வந்தடைந்தோம் !

விமான வாயிலில் ஒரு இளம்பெண் அதிகாரி சக்கரநாற்காலில்கள் மற்றும் சிப்பந்திகளுடன் நின்றிருந்தாள்...

" உங்கள் தந்தையின் பெயர் முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ளதா ?... "

" இல்லை... ஆனால்... "

" மன்னிக்கவும் ! முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்தான் உதவ முடியும் ! நடக்கவே முடியவில்லையென்றால் சொல்லுங்கள்... ஆம்புலன்ஸை கூப்பிடுகிறேன் ! "

குடியுறிமை மையம் அமைதியாய் இருந்தது...

கண்ணாடி தடுப்புக்கு பின்னாலிருந்து சலனமற்ற முகத்துடன் மாலை வணக்கம் கூறிய அதிகாரி எங்கள் பாஸ்போர்ட்டுகளை வாங்கினார்... அதே சலனமற்ற தொனியில் நன்றி கூறியபடி திருப்பிகொடுத்தார்.... எனக்கு பின்னால் வந்த பிரெஞ்சுக்காரர்களுக்கும் அதே தொனி !

அன்பு, காதல், காமம் அனைத்தையும் சட்டங்களுக்குள் அடைத்த ஐரோப்பிய யூனியன்  எங்களை மகிழ்வுடன் வரவேற்றது !




இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.